சென்னை: மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் ஜூலை 19ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோவையில் இன்றும் (ஜூலை 17) நாளையும் (ஜூலை 18) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் ஜூலை 19-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் நீலகிரி மற்றும் கோவையில் இன்றும் (ஜூலை 17) நாளையும் (ஜூலை 18) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.