சென்னை: சமரசம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜன சேனா கட்சித் தலைவரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாண் கூறியுள்ளார். இது தொடர்பாக, நேற்று அவர் ஒரு எக்ஸ் வலைப்பதிவு இடுகையில் கூறியதாவது:-
சமீபத்தில் தமிழ்நாட்டில் 5 வெவ்வேறு சம்பவங்களில் 24 இந்திய மீனவர்கள் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது மிகவும் கவலையளிக்கிறது. குறிப்பாக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காயமடைந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் கவலையளிக்கிறது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவின் அடிப்படையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதைத் தடுக்க நமது இந்திய வெளியுறவு அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு மூலம், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இரு நாடுகளும் விரைவான தீர்வைக் காண வேண்டும். எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களின் கண்ணியம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் சமரசம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.