வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாக்கா நகரில் இருந்து வந்த தகவலின்படி, இந்த தடை நடவடிக்கை அரசியல் பரப்பெழுச்சியையும் சர்வதேச அளவிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து, இந்தியாவில் தஞ்சம் பெற்றிருந்தார். இதையடுத்து, நோபெல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அவாமி லீக் மீது இனப்படுகொலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன.
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை தவிர்க்காததற்காகவும் ஹசீனா அரசுக்கு இடைக்கால அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் சமூக வலைதளங்களில் ஹசீனா தொடர்ந்து மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களிடம் பேசினார். இதனை எதிர்த்து அரசு தீவிர நடவடிக்கைக்கு தயாரானது.அவாமி லீக் கட்சியின் செயல்பாடுகள் நாட்டின் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என அரசு தெரிவித்துள்ளது.
அவாமி லீக் மற்றும் அதன் தலைவர்கள் தொடர்பான குற்றவியல் விசாரணை முடியும் வரை இந்த தடை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த தடை, வங்கதேச அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்கால அரசியல் நிலைமை குறித்து பல வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் விமர்சனத்தையும் ஆதரவும் உருவாக்கி வருகிறது. ஷேக் ஹசீனாவின் எதிர்கால அரசியல் பயணம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.