சென்னை: தமிழக கவர்னர் ரவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அவரது பதவியை நீட்டிக்க ஜனாதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.என்.ரவி ஆகஸ்ட் 1, 2019 அன்று நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் மேகாலயாவின் ஆளுநராகவும் (டிசம்பர் 18, 2019 முதல் ஜனவரி 26, 2020 வரை) பொறுப்பேற்றார். நாகாலாந்து ஆளுநராக இருந்த ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்தார். 2021ஆம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராக மாற்றப்பட்டு தற்போது வரை தொடர்கிறார்.
ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். 2019 ஆகஸ்டில் ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பேற்றார்.அவரது பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைகிறது.இதையடுத்து தமிழகத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்டது.
ஆனால், ஆளுநர் ரவியின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற ரவி, இதுதொடர்பாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.