புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அரசுப் பள்ளிகளில் தேநீர் தயாரித்தல், பக்கோடா சுடுதல், வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டுதல் உள்ளிட்ட தொழில்களுக்கானப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்கட்டமாக அம்மாநிலத்தின் 26 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இப்பயிற்சியை ஆசிரியர்கள் அளிக்கின்றனர்.
பாஜக ஆளும் உ.பி.யின் அரசுப் பள்ளிகளில், ‘கற்றுப் பார்’ எனும் பெயரில் ஒரு புதிய தொழில் கல்வித் திட்டம் அமலாக்கப்படுகிறது. இதன்மூலம், தம் கல்வியுடன் சுயதொழில்களையும் மாணவர்கள் கற்க முடியும் என்பது அதன் நோக்கமாக உள்ளது. இந்த திட்டப்படி அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியுடன் பக்கோடா சுடுவது, தேநீர் தயாரிப்பது எப்படி என்பது உள்ளிட்டவற்றை கற்றுத் தர உள்ளனர்.
இத்துடன், வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டுவது, பழரசங்கள் தயாரிப்பது, விவசாயம் மற்றும் தச்சு உள்ளிட்ட தொழில்களும் கற்றுத்தர உள்ளனர். இந்தத் திட்டம் உ.பி மாணவர்களின் எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உபி அரசின் இந்த ‘கற்றுப் பார்’ திட்டமானது முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள மாநில அரசின் 26 பள்ளிகளில் அமலாக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இந்த பயிற்சிக்காக உ.பி அரசின் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.28,770 செலவுத் தொகையாக அளிக்கப்படுகிறது. இதில் அந்த 26 பள்ளிகளும் எண்ணெய் சட்டி, ஜல்லிக் கரண்டி உள்ளிட்ட சுமார் ஐம்பது வகையான உபகரணங்களை வாங்கவுள்ளனர்.
உ.பி அரசு முதல் கட்டமாக தேர்வு செய்துள்ள 26 பள்ளிகளில் சுமார் பத்து பள்ளிகள் பக்கோடா சுடுதல், தேநீர் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை மாணவர்களுக்காகத் தொடங்கி விட்டன. மீதம் உள்ள பள்ளிகளும் இந்த பயிற்சியை தொடங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த 26 பள்ளிகளில் கிடைக்கும் பலனை பொறுத்து படிப்படியாக உ.பி.யிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தேநீர், பக்கோடா உள்ளிட்ட பயிற்சிகள் துவக்கப்பட உள்ளன.