புதுடில்லி: தேர்வு எழுத தடை விதிக்கப்படலாம்… பார்வை மற்றும் மன ரீதியிலான பிரச்னை உள்ளிட்டவற்றை மறைத்தது மற்றும் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கரிடம் விளக்கம் கேட்டு யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு, அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து எதிர்காலத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிக்கப்படலாம்.
மஹாராஷ்டிராவின் உதவி கலெக்டராக பணியாற்றிய பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கர் என்பவர், அரசால் வழங்கப்படாத வசதிகளை அவர் அத்துமீறி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. தன் சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு – நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விதிமீறலில் ஈடுபட்டதை அடுத்து பூஜா, வாஷிம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.
தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள அவர், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் கமிஷனை சமீபத்தில் அமைத்தது. அவரது பயிற்சியையும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பொய் சொல்லியும், தனது அடையாளத்தை மறைத்து தேர்வு எழுதியதற்காக பூஜா கேத்கருக்கு விளக்கம் கேட்டு யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வரம்பு மீறி மோசடி செய்ய முயற்சித்த பூஜா கேத்கருக்கு எதிராக யுபிஎஸ்சி நடவடிக்கைகளை துவங்கி உள்ளது. கிரிமினல் வழக்குப்பதிவு செய்தல், வெற்றி பெற்றதை ரத்து செய்வது குறித்து பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்கு அவர் அளிக்கும் பதிலை வைத்து, எதிர்காலத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.