கர்நாடகத்தில் ராமநகரா மாவட்டத்தின் பெயர் மாற்றம் ஏற்பட்ட நிலையில், நில விலைகள் வெகுவாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூருக்கு மிக அருகில் உள்ள இந்த மாவட்டம் இனி “பெங்களூரு தெற்கு” என அழைக்கப்படும். இது ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால், முன்னாள் முதல்வர் குமாரசாமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த பெயர் மாற்றம் ரியல் எஸ்டேட் விலை உயர்வை ஊக்குவிக்க செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். மாநில அரசோ, பொதுமக்களின் கருத்தை கருத்தில் கொண்டே மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தது. தற்போது ராமநகராவில் சதுர அடி நில விலை ரூ.2,354 ஆக உள்ளது.
இது இரட்டிப்பு ஆகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிலம் வாங்கவேண்டும் எனும் சாமான்ய மக்களின் கனவு நீடிக்க வாய்ப்பு இல்லை. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்த மாவட்டத்தில், அவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இது நன்மை தரும் என்பதுதான் பொதுமக்கள் கருத்து. பெயர் மாற்றத்திற்கு பின்னால் அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது.
அதேசமயம், முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் இந்த மாற்றத்தை முழுமையாக நியாயப்படுத்தி இருக்கின்றனர். விவசாயிகளின் நிலத்தின் மதிப்பு உயரவே இது மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றம் தொழில்முனைவோர்களை கவரும் வகையில் இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், மக்கள் இடையே குழப்பம் நிலவுகிறது. நில விலை உயர்வால் பலர் வீடு வாங்க முடியாமல் போவார்கள் என்பதே அச்சம். இது ஒரு மாவட்ட மாற்றம் அல்ல, வாழ்க்கை மாற்றமாய்தான் அமைந்துள்ளது.