புதுடெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவர் பதவியை மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளார். அவர் பதவிக்காலம் முடிய இன்னும் 5 ஆண்டுகள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவராக மனோஜ் சோனி இருந்தார். அவருக்கு வயது 59. 2017ல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் சேர்ந்தார்.
மே 2023 இல், அவர் UPSC தலைவராக பதவியேற்றார். சமீபத்தில், யுபிஎஸ்சி தேர்வில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று (ஜூலை 20) பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களால் பதவி விலகுவதாக மனோஜ் சோனி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொண்டு செய்ய விருப்பம்
குஜராத்தில் உள்ள சுவாமி நாராயண் பிரிவின் கிளையான பிரஸ்வம் மிஷனில் தொண்டு செய்ய விரும்புகிறேன். போலி சான்றிதழ் கொடுத்து ஐஏஎஸ் வேலை வாங்கிய பூஜா கேத்கர் விவகாரத்திலும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மனோஜ் சோனி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
பந்தா ஐஏஎஸ் அதிகாரி மீது புகார்
இதனிடையே, பார்வை மற்றும் மனநல பிரச்சனைகளை மறைத்து பல சர்ச்சைகளில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கருக்கு யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே மனோஜ் சோனி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.