ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்காக வித்தியாசமான ஒரு விற்பனை திட்டத்தை அறிவித்து, விமான பயணத்தை அனைவருக்கும் எளிமையாக மாற்றியுள்ளது. ரயில் டிக்கெட் விலையில் விமானத்தில் பறக்கலாம் என்பதுபோன்ற சலுகையுடன், உள்நாட்டிலும் சர்வதேச தளங்களிலும் பயணிக்க விரும்புவோருக்கான இந்த வாய்ப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த விற்பனையின் கீழ், உள்நாட்டு பயணங்கள் ரூ.1,199 தொடக்க விலையில் முன்பதிவு செய்யலாம். சர்வதேச வழித்தடங்களில் சுற்றுப்பயண டிக்கெட்டுகள் ரூ.11,969 தொடக்க விலையில் கிடைக்கின்றன. இந்த சிறப்பான சலுகையை பெறுவதற்கான இறுதி காலக்கெடு மே 25, 2025 அன்று இரவு 11:59 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஏர் இந்தியாவின் இணையதளத்திலும் மொபைல் செயலியிலும் நேரடியாக முன்பதிவு செய்யலாம்.
இந்த சலுகை மூலம் உள்நாட்டுப் பயணங்களுக்கு செப்டம்பர் 30, 2025 வரை பயணிக்கலாம். சர்வதேச பயணங்கள், குறிப்பாக வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு டிசம்பர் 10, 2025 வரை செல்லும் பயணங்களுக்கு பொருந்தும். மேலும், இந்த விற்பனையில் முன்பதிவு கட்டணம் இல்லாமல் டிக்கெட் பெறலாம் என்பது கூடுதல் நன்மையாகும்.
பயண செலவை மேலும் குறைக்க, FLYAI என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் ரூ.3,000 வரை சேமிக்கலாம். அதற்குப் மேலாக, UPI மற்றும் நெட் பேங்கிங் மூலமாக பணம் செலுத்தும் பயணிகள், UPIPROMO மற்றும் NBPROMO குறியீடுகளைப் பயன்படுத்தி ரூ.2,500 வரை கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம்.
ஏர் இந்தியா, முன்பணம் செலுத்தும் சாமான்களுக்காக 40% வரை தள்ளுபடியும், விருப்பமான இருக்கை தேர்வுகளுக்கு 20% வரை தள்ளுபடியும் வழங்குகிறது. இந்த சலுகைகள் விமான நிறுவனத்தின் இணையதளம் மற்றும் செயலியில் மட்டுமே பெறக்கூடியவை.
மேலும் HSBC வங்கியுடன் இணைந்து, சுற்றுப்பயண முன்பதிவுகளில் ரூ.8,000 வரை உடனடி சேமிப்பும் வழங்கப்படுகிறது. இது பிஸ்னஸ் கிளாஸ், பிரீமியம் பிஸ்னஸ் கிளாஸ் மற்றும் முதல் வகுப்பு பயணிகளுக்கும் பொருந்தும்.
வாடிக்கையாளர்கள், ஏர் இந்தியா வலைத்தளம், செயலி, விமான நிலைய டிக்கெட் அலுவலகம், பயண முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர் மையம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த விற்பனை முற்றிலும் “முதலில் வருபவருக்கு முதலில் வழங்கப்படும்” என்ற அடிப்படையில் செயல்படுகிறது.
இவ்வாறு ஏர் இந்தியா வழங்கும் இந்த ஆஃபர், விமான பயணத்தை அதிகமானோர் அனுபவிக்க வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது. சிறந்த திட்டமிடலுடன் பயணம் செய்ய விரும்புவோர் இன்று இரவுக்குள் முன்பதிவு செய்து பயனடையலாம்.