ஆந்திர பிரதேசத்தில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான ரூ.3653.10 கோடி மதிப்பிலான பெரியதொரு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பாட்வெல்-நெல்லூர் இடையே 108.134 கிலோமீட்டர் தொலைவில் நான்கு வழிச்சாலை கட்டப்படவுள்ளது. இந்த ஒப்புதலை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வழங்கியது.

புதிய சாலை திட்டம் விசாகப்பட்டினம் – சென்னை தொழில் வழித்தடம், ஐதராபாத் – பெங்களூரு தொழில் வழித்தடம் மற்றும் சென்னை – பெங்களூரு வழித்தடத்தை இணைக்கும் வகையில் அமையும். இது இந்திய சரக்குப் போக்குவரத்திற்குப் புதிய உந்துதலாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் புறநகர்ப்பட்ட பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி மற்றும் இடமாற்ற போக்குவரத்தும் விரைந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தத் திட்டம் நேரடியாக 20 லட்சம் மனித நாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் என்றும், மறைமுகமாக 23 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்தப் பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்பதோடு, மக்கள் வாழ்க்கை தரம் மேம்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், ரயில்வே பாதைகளை மேம்படுத்தும் நோக்கில் மற்றொரு திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரத்லம் – நாக்டா 3-வது மற்றும் 4-வது பாதை, வர்தா – பலார்ஷா 4-வது பாதைகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த இரு திட்டங்களும் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 784 கிராமங்களை உள்ளடக்கியது.
இந்த ரயில்வே திட்டங்களின் மொத்த மதிப்பீட்டுச் செலவு ரூ.3,399 கோடி ஆகும். இது 2029-30ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது. சுமார் 176 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே போக்குவரத்து திறன் அதிகரிக்கப்பட உள்ளதோடு, சுமார் 19.74 லட்சம் மக்களுக்கு வசதியையும் இந்த திட்டங்கள் வழங்கும்.
அதே சமயம், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆர். பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். “ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கும் முனைப்பிற்காக என்.டி.ஆர். புகழப்படுகிறார். அவரது கனவுகள் இன்று நடக்கின்றன” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், மே 29 அன்று மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக அவர் பயணிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வில் நகர எரிவாயு விநியோக திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இதன் மூலம் பல வீடுகளுக்கு பயனுள்ளதாக அமையும் எனவும், வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.