தாம்பரம் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டுப் பணிகள் நடப்பதால், மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, மதுரை, திருச்சி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து வரும் பெரும்பாலான ரயில்கள் தாம்பரம் வழியாக எழும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
இந்நிலையில், தாம்பரம் ரயில்வே பணிமனையில் சிக்னல் மேம்பாடு, தண்டவாள பராமரிப்பு உள்ளிட்ட சில முக்கிய பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 18 வரை பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜூலை 31ம் தேதி வரை தாம்பரம் வரும் தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோத்யா எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 22ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. ஜூலை 23 முதல் ஜூலை 31 வரை முழுமையாக ரத்து செய்யப்படும். இதேபோல், எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 23 முதல் 31ம் தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
விழுப்புரத்தில் இருந்து 22, 24, 26, 27, 29, 31 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இரண்டாவது வழித்தடத்தில் 24, 25, 28, 30 ஆகிய தேதிகளில் செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வருவதற்கு பதிலாக விழுப்புரத்தில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு-சென்னை-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஜூலை 22 முதல் 31 வரை திருச்சி வரை மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மறுபுறம் திருச்சியில் இருந்து மங்களூருக்கு 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ரயில் சேவையில் மாற்றம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.