மாஸ்கோ: ரஷ்யா மீது உக்ரைன் மேற்கொண்ட கடுமையான டிரோன் தாக்குதல், அமெரிக்கா மீது ஜப்பான் நடத்திய பேர்ல் ஹார்பர் தாக்குதலை ஒத்ததாக சர்வதேச கவனம் ஈர்த்து உள்ளது. 1941ல் ஹவாயின் பேர்ல் ஹார்பரில் நடந்த தாக்குதலால் அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டது. அப்படியான தாக்குதலே இப்போது ரஷ்யாவிலும் நடந்துள்ளது.

உக்ரைன் நடத்திய இந்த தாக்குதலில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள், குறிப்பாக Tu-95 மற்றும் Tu-22 ரக குண்டு வீச்சு விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது, ரஷ்யா-உக்ரைன் போரில் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இந்த விமானங்கள், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன், இந்த தாக்குதலை மிகச் சிறிய ரக சூசைட் டிரோன்கள் மூலம் திட்டமிட்ட வகையில் நடத்தியுள்ளது. கருப்பாக பெயிண்ட் செய்யப்பட்ட இந்த டிரோன்கள் ரேடாரில் பதிவாகாமல், விமானங்கள் ஹேங்கரில் இருக்கும் நேரத்தில் நேராக விழுந்து வெடித்து சேதம் விளைவித்துள்ளன. இது ரஷ்யாவின் விமானக் கொள்ளளவின் மீது நேரடி தாக்கமாகும்.
தாக்குதலால் மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ரஷ்ய இராணுவ விமான தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. சில பகுதிகளில் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
இந்த தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையேயான போரை புதிய கட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. தற்போது ரஷ்யா கடுமையான பதிலடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தும் நிலைக்கு செல்லும் அபாயம் உண்டாகி இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், உலக நாடுகள் உஷாராக இருந்து, போர் மேலும் தீவிரமாகாமல் தடுக்க முயற்சிக்க வேண்டும் என்பதே சர்வதேச கருத்தாக இருக்கிறது.