டெல்லி: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளது. கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில், கும்பாபிஷேக நேரத்தை மதியம் 12:05 மணியிலிருந்து மதியம் 12:45 மணி வரை அதாவது நண்பகல் 12:45 மணி வரை மாற்ற உத்தரவிடக் கோரி சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே மனுவை தள்ளுபடி செய்திருந்ததால், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், “குடமுழுக்கு விழா நேரத்தை முடிவு செய்வதற்காக மே 24 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மனுதாரர் கலந்து கொண்டார். அப்போது அவர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை” என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து, கும்பாபிஷேக நேரத்தை மாற்றக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.