கோல்கட்டா: ”கலவரத்தால் பாதிக்கப்பட்டு வங்கதேசத்திலிருந்து வருவோருக்கு அடைக்கலம் அளிக்க தயார்,” என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் எழுப்பப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், 1993ல் இடதுசாரி கட்சி ஆட்சி நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் இறந்தனர். இந்த போராட்டத்தை, அப்போது காங்கிரசில் இருந்த மம்தா பானர்ஜி தலைமையேற்று நடத்தினார். இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21ம் தேதியை தியாகிகள் தினமாக திரிணமுல் காங்., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடைப்பிடிக்கிறன.
இதையொட்டி கோல்கட்டாவில் நேற்று ஏராளமானோர் பங்கேற்ற கூட்டத்தில், முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நாட்டை பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு சொந்த நலனே முக்கியம். அவர்கள் கோழைகள்.
மத்தியில் அமைந்துள்ளது நிலையான அரசு அல்ல. விசாரணை அமைப்புகளையும், தேர்தல் கமிஷனையும் தவறாக பயன்படுத்தி அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது; விரையில் வீழும்.
வங்கத்தால் மட்டுமே இந்தியாவின் இருப்பை பாதுகாக்க முடியும். வங்கம் இல்லாமல் இந்தியா இல்லை. வங்கதேச பிரச்னை குறித்து பேச விரும்பவில்லை. அது அவர்களின் உள்நாட்டு பிரச்னை. ஆனால் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
ஆதரவற்ற வங்கதேச மக்கள் மேற்கு வங்க கதவுகளை தட்டினால் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க தயார். இவ்வாறு அவர் பேசினார். மம்தாவின் கூட்டத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பங்கேற்றார்.
இதற்கு, மேற்கு வங்க பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பக்கத்து நாட்டில் நடக்கும் பிரச்னை குறித்து மத்திய அரசுடன் ஆலோசிக்காமல் மம்தா கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என, பா.ஜ., தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.