பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளதாக அறிவித்தது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததோடு, தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிக்கும் தீவிரவாதிகள் செய்ததாகத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்தியா பல நடவடிக்கைகள் எடுத்து வந்தது, அவற்றில் முக்கியமான ஒன்று நீர் ஒப்பந்தத்தை நிறைவு செய்தது.

சிந்து நதி ஒப்பந்தத்தின்படி, இந்தியா பாகிஸ்தானுக்குத் தண்ணீர் வழங்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது இந்தியா தனது தேவைகளைப் பொறுத்து தண்ணீர் விநியோகத்தை கட்டுப்படுத்த முடியும். இந்த முடிவால் பாகிஸ்தான் மிகவும் தடுமாறியுள்ளது. ஏற்கனவே சிந்து நதியில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் சாகுபடிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
தார்பெலா மற்றும் மங்லா அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. செனாப் நதியில் இந்தியா தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியதால் சூழ்நிலை மேலும் மோசமாகியுள்ளது. ஜூன் 2 ஆம் தேதி வெளியான தரவின்படி, சிந்து நதியின் நீர் அளவு 10.3 சதவீதம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை இன்னும் நான்கு வாரங்களில் தான் ஆரம்பிக்கவுள்ளது.
பஞ்சாப் பகுதியில் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், கரீஃப் பயிர்கள் சாகுபடிக்கேற்ற நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு 21 சதவீத நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என கணித்துள்ளது. பாசனத்திற்குப் பயன்படும் முக்கிய அணைகள் 50%க்கும் குறைவான நிலைக்குச் செல்வதற்கான அபாயம் இருக்கிறது.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடந்த வாரம் தஜிகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டில் இந்த பிரச்சினையை எடுத்துரைத்தார். உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயன்றார். இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானதாகவே இருக்கிறது. தீவிரவாதத்திற்கு ஆதரவை நிறுத்தும் வரை, தண்ணீரை வழங்க முடியாது என்பது இந்தியாவின் நோக்கம். ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என இந்தியா உறுதியாக தெரிவித்து வருகிறது.