பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டம் பெரும் துயர நிகழ்வாக மாறியுள்ளது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தை காண வந்த பெரும் மக்கள் திரளில் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் உயிரிழந்த தகவலால் வெற்றிக் கொண்டாட்டமே மங்கிவிட்டது.

கர்நாடகா முதல்வர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்றும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், கூட்ட நெரிசலுக்கான காரணங்களை கண்டறிவதற்காக நீதிமன்ற விசாரணை உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிக்கையை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சின்னசாமி மைதானத்தில் 35,000 பேர் அமரக் கூடிய இடமிருந்தாலும், அதற்கு பல மடங்கு மக்கள் வந்ததால் கட்டுப்பாடுகள் முற்றிலும் தகர்ந்தன.
முதலமைச்சர் தெரிவித்ததாவது, மக்கள் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த போது நெரிசல் ஏற்பட்டு இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் உறுதி செய்துள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்படாதது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதயத்தை துளைக்கும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தன்னோடு இருக்கிறேன் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் உயிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.