அயோத்தி: அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கட்டுமானத்தில் மொத்தம் 45 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் முதல் தளத்தில் கட்டப்பட்ட ராமர் தர்பார் உட்பட 8 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில், ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். வரிகளைத் தவிர்த்து, தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 50 கோடி. கோயிலின் தரைத் தளத்திலும் ராமர் இருக்கும் இடத்திலும் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேஷாவதர் கோயிலில் இன்னும் தங்க வேலைகள் நடந்து வருகின்றன. ராமர் கோயிலின் பிரதான கட்டமைப்பு கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அருங்காட்சியகம், அரங்கம் மற்றும் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட கோயில் வளாகத்தின் பிற பகுதிகள் இன்னும் கட்டுமானத்தில் உள்ளன.
டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே ராமர் தர்பாரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார். விஷ்வ இந்து பரிஷத் தேசிய பொருளாளர் தினேஷ் நெவாடியா கூறுகையில், “குஜராத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நகை நிறுவனத்தின் உரிமையாளர் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூரி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு 11 வைரம் பதித்த கிரீடங்கள், ஒரு தங்க வில் மற்றும் அம்பு, 30 கிலோ வெள்ளி, 300 கிராம் தங்கம் மற்றும் மாணிக்கங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.”