கொலம்பியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ஜனநாயக மையக் கட்சியின் அதிபர் வேட்பாளர் மிகுவல் உரிபே மீது பொகோட்டாவில் நடந்த பிரசார பேரணியின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உரிபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பங்களா ஃபோன்டிபோன் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் நிகழ்ந்ததாக பொகோட்டா மேயர் கார்லோஸ் கலான் தெரிவித்தார். உரிபே தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தலையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச்சூட்டில் உரிபே ரத்த வெள்ளத்தில் விழுந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. கொலம்பியாவில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உரிபேயின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இது ஒரு பேரிழப்பு என்றும், அவர்களின் வலியில் தாம் உடனிருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உரிபே குடும்பம் இதற்கு முனும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களை எதிர்கொண்டுள்ளது. உரிபேயின் தாய் டயானா டர்பே, பத்திரிகையாளராக இருந்த காலத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபருக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக 1991ல் அவர் எஸ்கோபரின் கும்பலால் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். இப்போது அவரது மகனும் தாக்குதலுக்கு உள்ளானது நாட்டில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக மையக் கட்சி இந்த தாக்குதலை ஒருவரின் மீது நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலாகக் காண முடியாது என தெரிவித்துள்ளது. இது கொலம்பிய ஜனநாயகத்தையும், அந்நாட்டின் சுதந்திரத்தையும் குறிவைக்கும் தீவிர முயற்சி என கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உரிபேயின் உடல்நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. மருத்துவக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.