நியூயார்க்: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் மிகவும் ஆபத்தானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். அணுசக்தி நிலையங்கள் மீது நடந்த தாக்குதலால் பிரச்சனைகள் மேலும் மோசமாகும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா மூன்று முக்கியமான ஈரான் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது உலகத்துக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் செயலால் மக்கள் மற்றும் உலக அமைதிக்கு நேரடி ஆபத்து ஏற்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மோதல் எல்லைகளை மீறிவிட்டது என்றும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நேரத்தில் குழப்பமான சூழ்நிலையை தவிர்த்து, ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றார். சண்டை, மோதல் அல்லது தாக்குதல் மூலம் தீர்வு கிடையாது. அமைதி மற்றும் பேச்சுவார்த்தையே உண்மையான வழி என அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தது போல, ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மேலும் மோசமாகும் என்றும் அவர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதற்காக, உலக நாடுகள் எல்லாம் ஒருங்கிணைந்து அமைதியை நோக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்தச் செயல் உலக மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது என கூறிய குட்டரெஸ், ராஜதந்திரம் மற்றும் உரையாடல் வழியேதான் சமாதானம் கிடைக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற நேரங்களில் சிந்தித்துப் பேசுவது, செயல்படுவது தான் சரியானது என்றும் அவர் கூறியுள்ளார்.