புதுடெல்லி: 5 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு நாட்டின் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்காக பிரதமரின் ஒருங்கிணைந்த தொகுப்பின் கீழ் 5 புதுமையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த 5 திட்டங்கள் பின்வருமாறு:1. முதல் முறை வேலை வாய்ப்பு: ஒரு நிறுவனத்தில் முதல் முறையாக சேருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, வருங்கால வைப்பு நிதியில் (இபிஎப்) புதிதாக பதிவு செய்பவர்களுக்கு ஒரு மாத சம்பளம் (ரூ.15 ஆயிரத்திற்கு மிகாமல்) 3 தவணைகளாக அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
மாத சம்பளம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 2. உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குதல்: உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவும், புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை ஊக்குவிக்கவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். புதிய ஊழியர்களின் EPF பதிவு அடிப்படையில், இரு தரப்பினரின் EPF பங்களிப்பு தொகை 4 ஆண்டுகளுக்கு அரசால் செலுத்தப்படும். முதலாளிகளுக்கு ஆதரவு: கூடுதல் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி புதிய ஊழியர்களின் இபிஎப் பங்களிப்பு தொகையை (மாதம் ரூ.3 ஆயிரம்) 2 ஆண்டுகளுக்கு அரசிடம் இருந்து திரும்பப் பெறலாம். இது நிறுவனங்களின் நிதிச்சுமையை குறைக்கும்.
4. திறன் மேம்பாட்டுத் திட்டம்: நாட்டில் உள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த மத்திய அரசின் உதவியுடன் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் இளைஞர்கள் எளிதில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். மாநில அரசுகள் மற்றும் தொழில்துறையினருடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
5. முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி: நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு ஓராண்டு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டம் 500 முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதன் மூலம் 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள். பயிற்சியின் போது அவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதுதவிர ஒரு முறை நிதியுதவியாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான பயிற்சிச் செலவை பயிற்சி நிறுவனங்களே ஏற்க வேண்டும். இந்த செலவினத்தில் 10 சதவீதம் அவர்களின் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியில் இருந்து பயன்படுத்தப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.