தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் – 50 கிராம்
முட்டை – 3
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 3 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, உப்பு தூவி நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும். அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, நீர் வற்றியதும், முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, மேலே கொத்தமல்லி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் முட்டை பொடிமாஸ் தயார்.