தொழில்நகரமாக திகழும் பெங்களூருவில் நீர் பற்றாக்குறை மற்றும் கழிவுநீர் மேலாண்மை தொடர்பான பிரச்சனைகள் நாளுக்கு நாள் தீவிரமாக உள்ளன. இந்த சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில், கர்நாடகா மாநில அரசு நீர் பாதுகாப்பு திட்டங்களை முழுமையாக செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், ரூ.3,662 கோடி மதிப்பிலான நிதியை உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது என்பது முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 183 ஏரிகள் தூர்வாரப்படவுள்ளன. இது வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீர்வட்டங்களை கட்டுப்படுத்தவும், நகரின் இயற்கை நீர்நிலைகளை பாதுகாக்கவும் உதவியாக இருக்கும். அதோடு, கர்நாடகா பேரிடர் மேலாண்மை மையம் நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்படுவதால், துல்லியமான வானிலை கணிப்புகள் மற்றும் அவசரநிலை தீர்வு நடவடிக்கைகள் எளிதாக மேற்கொள்ள முடியும்.
மேலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு, நகரத்தின் சுகாதார சூழல் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9 புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு, தொழிற்சாலைகள் மற்றும் வேலாண் நிலங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தும் வழிமுறையும் வகுக்கப்படுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் முயற்சியும் முன்னெடுக்கப்படும்.
இந்த நிதி ரூ.3,662 கோடி, 20 ஆண்டுகள் காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டிய கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இத்திட்டம் நிறைவேறினால், பெங்களூருவில் நீர்ப்பிரச்சனைகள் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறையும் என நம்பப்படுகிறது.