லாஸ் வெகாஸ்: அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் உள்ள லாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்ஜின் கோளாறு காரணமாக வானில் புகை வெளியேறிய நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 153 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் புறப்பட்ட இந்த விமானம், வட கரோலினாவில் உள்ள சார்லட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிச் சென்றபோது, பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென புகை கிளம்பியது.
இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்திலிருந்து புகை வருவதை உணர்ந்த விமானி, உடனடியாக கட்டுப்பாட்டை இழக்காமல், சாமர்த்தியமாக விமானத்தை மீண்டும் லாஸ் வெகாஸ் விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக தரையிறக்கினார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது பெரும் நிவாரணமாகும். விமானம் தரையிறங்கியவுடன், பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் விமானப்பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களின் பயணத்தை தொடர விரைந்து ஏற்பாடு செய்கிறோம்” என தெரிவித்துள்ளனர். பயணிகள், விமானத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்த நிலையில், விமான சேவை குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விமானம் பறக்கும்போது புகை கிளம்பும் காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ பயண சுரங்கங்களில் பாதுகாப்பு நெறிமுறைகள் மீண்டும் ஒரு முறை விவாதத்திற்கிடமாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.