காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஜூன் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானை குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதில் முக்கியமான ஒன்றாக, இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை நாடு கடத்தும் முடிவை மத்திய அரசு எடுத்தது. அதன்படி, ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அவர்களை வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையின் காரணமாக பலர் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து பிரிய வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டனர். ரக்ஷந்தா ரஷித் என்ற 63 வயது பெண்மணியும் அவர்களில் ஒருவர். 38 ஆண்டுகளாக நீண்டகால விசா அடிப்படையில் இந்தியாவில் வசித்துவந்த அவர், குடியுரிமைக்காக செய்த விண்ணப்பம் பலமுறை மறுக்கப்பட்டது. இந்நிலையில், தன்னை பாகிஸ்தானுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்ததை எதிர்த்து, ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் ரக்ஷந்தா இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது மகள் நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், தாயின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், பாகிஸ்தானில் அவர் ஆதரவின்றி தவிப்பதாகவும் கூறப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டி, மத்திய உள்துறை நடவடிக்கையை நீதி கேட்டு எதிர்கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட ரக்ஷந்தா ரஷித்தை 10 நாட்களுக்குள் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அதன் அறிக்கையை ஜூலை 1ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ராகுல் பாரதி உத்தரவிட்டுள்ளார். தற்போது மத்திய அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.