மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 61 வயதான ஒரு மூதாட்டியை ‘டிஜிட்டல் கைது’ செய்யப்போவதாக மிரட்டி, 3 கோடி ரூபாயை மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி, கூரியர் நிறுவன ஊழியர் என கூறிய ஒருவன், அந்த பெண்ணுக்கு தொலைபேசியில் அழைத்து பேசினார். அவர், பெண்ணின் பெயரில் வந்த ஒரு பார்சலில் 140 கிராம் போதைப்பொருள் இருப்பதாகவும், அது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதனுடன் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரி என தன்னை அடையாளம் கூறிய மற்றொரு நபர், மூதாட்டியை வாட்ஸாப் வழியாக தொடர்புகொண்டு, சில போலியான ஆவணங்களை திரையில் காட்டி, போதைப்பொருள் கடத்தலில் இவர் தொடர்புடையவராக இருப்பதாக கூறினார். மேலும், அதற்காக தன்னை டிஜிட்டல் முறையில் கைது செய்யப்போவதாக மிரட்டினார். இந்த மிரட்டலால் பயந்த மூதாட்டி, சிக்கல்களில் இருந்து தப்புவதற்காக, அவர்கள் கூறிய இரு வங்கி கணக்குகளில் மொத்தம் 3.04 கோடி ரூபாயை பரிமாறியிருந்தார்.
சில நாட்கள் கழித்து தன்னிடம் மோசடி நடந்ததை உணர்ந்த மூதாட்டி, தானே போலீசில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 13ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, அந்த கும்பல் 82.46 லட்சம் ரூபாயை அமெரிக்க டாலராக மாற்றி, பிறகு அதை கிரிப்டோகரன்சியாக மாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பியிருப்பதும் தெரியவந்தது. இது மிக ஆழமான திட்டமிடலோடு நடந்ததாக காவல்துறையினர் உறுதியாக்கினர்.
இந்த வழக்கில் தொடர்ச்சியான விசாரணை நடத்தப்பட்டு, தற்போது மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிஷோர் பன்சிலால் ஜெயின், நகை வர்த்தகர் பவான் கோத்தாரி மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தவால் சந்தோஷ் பலேரோ ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் மூதாட்டிகளை மட்டுமல்ல, அனைவரையும் விழிப்புடன் இருக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வருகிறது.