மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ நியமனம் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி மருத்துவத்துறையில் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதத்திற்குள் 20 டீன்கள் ஓய்வு பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ‘டீனாக’ இருந்தவர் ரெத்தினவேலு. இவர் 2 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாக கூறி, புதிய ‘டீன்’ உடனடியாக நியமிக்கப்படவில்லை. தற்காலிக ‘டீன்-சார்ஜ்’ ஆக பேராசிரியர் தர்மராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடந்து ஒரு மாதமாகியும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு புதிய ‘டீன்’ நியமிக்கப்படவில்லை.
முன்பெல்லாம், அரசு ராஜாஜி மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளில், இதுபோன்ற காலகட்டங்களில், உடனடியாக புதிய ‘டீன்கள்’ நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் நீண்டகாலமாக ‘டீன்-இன்-சார்ஜ்’ ஒருவரை நியமித்து நடத்தி வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் அதிக நோயாளிகள் உள்ள அரசு மருத்துவமனை, அதிக அறுவை சிகிச்சைகள், அதிக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ள அரசு மருத்துவமனையாக அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளது. ‘பொறுப்பு’ டீன்.
புதிய ‘டீன்’ நியமிக்கப்படாததால், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்ற வழக்கமான பணிகள் மட்டும் தடையின்றி நடந்து வருகிறது. மருத்துவமனையின் வளர்ச்சிக்கு திட்டமிடுதல், திட்டங்கள் தீட்டுதல், காலி பணியிடங்களை நிரப்புதல், புதிய மருத்துவ உபகரணங்கள் வாங்குதல் என பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன.
மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ராமநாதபுரம், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன்கள், இம்மாதத்துடன் ஓய்வு பெற உள்ளனர். மதுரையுடன் சேர்த்து, ‘டீன்’ காலியிடங்களுடன், இம்மாத இறுதிக்குள், புதிய டீன்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 20 மருத்துவக் கல்லூரி ‘டீன்கள்’ பிப்ரவரி மாதத்திற்குள் ஓய்வு பெற உள்ளனர்.
இதற்காக, 24 பேர் கொண்ட, ‘டீன்’ குழுவை, மருத்துவக் கல்வி இயக்குனரகம் தயாரித்து வருகிறது. இந்த ‘டீன்’ குழுவில் நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றிய துறைத் தலைவர்களும் அடங்குவர். அவர்களுடன் காலியாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய டீன்கள் நியமிக்கப்பட உள்ளனர்,” என்றார்.