சென்னை: பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை பணத்தால் விலை பேசும் அறமற்ற தி.மு.க அரசு என்று ஆதவ் அர்ஜூனா விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் கோயிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார், காவல்துறை விசாரணையில் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு மரணமடைந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள், தி.மு.க. கூட்டணியிலேயே இருக்கக்கூடிய கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தி.மு.க ஆட்சிக்கு எதிராக இந்த விவகாரத்தில் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதற்குப் பிறகும் மழுப்பல் நடவடிக்கைகள், பணத்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை விலை பேசுவது, உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது என அநீதி நடவடிக்கைகளையே தொடர்ந்து செய்து வருகிறது.
ஒரு மரணத்தில், கொஞ்சமும் இரக்கமோ… குற்றவுணர்வோ இல்லாமல், பொய்யே கூச்சப்படும் அளவுக்கு பொய்களை நிரப்பி கதை எழுதும் வேலைதான் இந்த எப்.ஐ.ஆர்-இல் வெளிப்படுகிறது.
அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், “உடலில் 18 இடங்களில் கொடும் காயங்கள் இருந்தன; எலும்புகள் உடைந்திருந்தன; உடலுக்கு வெளியில் மட்டுமில்லாமல், உடலுக்கு உள்ளேயும் உறுப்புகள் காயமடைந்திருந்தன; தொண்டைக்குள்ளும் கொடும் காயங்கள் இருந்தன” எனத் தெளிவான பிறகும், இப்படி ஒரு பித்தலாட்டமான எப்.ஐ.ஆர்-யைத் தயார் செய்துள்ளது முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை!
அதனால், அஜித்குமார் ‘கஸ்டடி’ மரணம் தொடர்பான வழக்கை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரித்ததைபோல, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.
அதோடு, தி.மு.க. ஆட்சியின் கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மறுக்கவில்லை. எனவே. அந்த 24 ‘கஸ்டடி’ மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதா? அந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? என்பது குறித்து வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு அரசின் உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உடனடியாக வெளியிட வேண்டும்.
மகனை இழந்து வேதனையில் தவிக்கும் அஜித்குமாரின் தாயாருக்கும். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் போராடும் பொதுமக்களுக்கும் எந்தச் சூழலிலும் தமிழக வெற்றிக் கழகம் உறுதுணையாய் நிற்கும்! போராடும்! . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.