சென்னை: 2021ஆம் ஆண்டு நத்தம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அவரது வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தேர்தலில் 11,932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நத்தம் விஸ்வநாதன் மீது, வேட்புமனுவில் உண்மைத்தகவல்களை மறைத்தார், பணப்பட்டுவாடா செய்தார், பரப்புரை விதிகளை மீறினார், சட்டபூர்வ செலவிற்கும் மீறிச் செலவு செய்தார் என ஆண்டி அம்பலம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, “வழக்கை விசாரிக்க போதுமான காரணங்கள் உள்ளன” என தீர்மானித்து, மனுவை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதன்மூலம், வழக்கை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை நத்தம் விஸ்வநாதன் எதிர்நோக்க வேண்டியுள்ளது. இவர் கடந்த 1999ல் இடைத்தேர்தலில் முதன்முறையாக எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 2001, 2006 மற்றும் 2011 தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். 2011ல் ஜெயலலிதா அமைச்சரவையில் மின்சார மற்றும் மதுவிலக்கு துறையின் அமைச்சராக இருந்தார்.
2016ல் தோல்வியடைந்த பின்பும், 2021ல் மீண்டும் நத்தம் தொகுதியில் வென்று சட்டமன்றத்திற்குள் திரும்பினார். தற்போதைய அதிமுக துணைப் பொதுச் செயலாளராக பணியாற்றும் இவர், வருங்கால தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.