நாகை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை வழக்கில் மூவர் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாமக நிர்வாகி பிரபாகரன் உள்பட 3 பேர், செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் மூவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டில் பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணியின் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன், மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமையில் (ஜூலை 4) நடைபெற்ற கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு, மீண்டும் காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், செம்பனார்கோயில் தனியார் பள்ளி அருகே காரை வழிமறித்த மர்ம நபர்கள், காரைச் சேதப்படுத்தியதுடன், மணிமாறனையும் வெட்டி படுகொலை செய்துவிட்டு, தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், மூவர் சரணடைந்துள்ளனர்.