சமீபத்தில் ஃபேட் டயட்ஸ், சூப்பர்ஃபுட்ஸ், சப்ளிமெண்ட்ஸ் போன்றவை அதிக கவனத்தை பெற்றுக் கொண்டுள்ள நிலையில், அடிப்படையான ஆனால் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்கள் சில தவிர்க்கப்படுகின்றன. அவற்றில் வைட்டமின் ஏ குறிப்பிடத்தக்கது. இந்த வைட்டமின் பார்வை திறன், நோய் எதிர்ப்பு சக்தி, சரும ஆரோக்கியம், செல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அவசியமானது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது குறைவாக இருந்தால் உடனடியாக தாக்கங்கள் தென்படக்கூடும்.

உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுவது போல், வைட்டமின் ஏ குறைபாடு குழந்தைகளில் தடுக்கக்கூடிய குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாகும். இந்த குறைபாடு தொடக்கத்தில் வலிகள், தோல் பிரச்சனைகள் போன்ற லேசான அறிகுறிகளாகத் தோன்றலாம். ஆனால், கண்டறியப்படாமல் தொடர்ந்தால் பார்வை இழப்பு, ஆழ்ந்த தோல் சேதம் மற்றும் வளர்ச்சித் தாமதம் போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக இருட்டில் பார்வையற்ற மாலைக்கண் நோய், வறண்ட கண்கள், கார்னியல் சேதம் போன்றவை பொதுவாக ஏற்படும்.
மேலும், வைட்டமின் ஏ நம் உடலில் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை பாதுகாக்கும் வகையில் செயல் படுகிறது. இதன் குறைபாடு நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்களுக்கு அடிக்கடி உள்ளாகச் செய்யும். குழந்தைகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். தோலிலும் இதன் தாக்கம் தெரியும்; வறண்ட மற்றும் செதில் சருமம், கரடுமுரடான தோல், அதிக நேரம் குணமடையாத காயங்கள் ஆகியவை பெரும்பாலும் கவனிக்கப்படாத அறிகுறிகள். சிறார்களில் எலும்பு வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
இவை அனைத்தும் ஒரு எளிய தீர்வுடன் தவிர்க்கக்கூடியவை. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் — கேரட், இலைக் கீரைகள், முட்டை, பால், சர்க்கரைவள்ளி போன்றவற்றை உணவில் சேர்த்தல் முக்கியம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையுடன் சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதும் நல்லது. இந்த குறைபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பலரின் பார்வையை காக்கலாம், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம், மேலும் பல உயிர்களைக் காப்பாற்றலாம்.