புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆந்திரா மற்றும் பீகாரில் மட்டும் கவனம் செலுத்தி மற்ற மாநிலங்களை பாஜக தலைமையிலான அரசு புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான திட்டங்கள் எதுவும் இல்லாததால், டெல்லியில் நாளை (ஜூலை 27) நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக அறிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் ஆளும் 3 மாநிலங்களின் முதல்வர்களான கர்நாடகாவின் சித்தராமையா, தெலுங்கானாவின் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேசத்தின் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இதைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோரும் இதே அறிவிப்பை வெளியிட்டனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் நேற்று கூறுகையில், “பஞ்சாப் மற்றும் நமது விவசாயிகள் குறித்து மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. அதனால், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறோம்,” என்றார்.
இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் டெல்லி செல்லவில்லை. முதல்வர் மம்தா பானர்ஜி எப்போது டெல்லி செல்கிறார் என்பதும், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பாரா இல்லையா என்பதும் நாளை (இன்று) தெரியவரும் என திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.