இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இந்தியா 1–2 என பின்தங்கியுள்ள நிலையில், தொடரில் மீண்டும் மீட்பு காண 4வது போட்டியில் வெற்றியை தேட வேண்டிய அவசியத்தில் உள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவாரா என்பது தொடர்ந்து விவாதத்துக்குரியதாக உள்ளது. தொடரின் தொடக்கத்தில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் எனத் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், 4வது போட்டிக்கான அவரது பங்கேற்பு பற்றி சந்தேகங்கள் நிலவுகின்றன.

முதல் போட்டியில் இந்தியா பந்துடன் சிறப்பாக விளையாடி இருந்தாலும் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து பும்ரா இரண்டாவது போட்டிக்கு ஓய்வெடுத்ததற்கான காரணங்களை பலரும் ஏற்கவில்லை. ஆனால் மூன்றாவது போட்டியில் பும்ரா விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால், அடுத்த போட்டியில் அவரின் பங்கேற்பு இந்தியாவின் வெற்றிக்கான முக்கியத்துவத்தை மேலும் உயர்த்துகிறது. முன்னாள் வீரர் இர்பான் பதான், நாட்டுக்காக விளையாடும் நேரத்தில் ‘பணிச்சுமை’ என்ற வார்த்தை பொருத்தமா என மறைமுகமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் 5வது நாளின் காலை நேரத்தில் 9.2 ஓவர்கள் தொடர்ந்து பவுலிங் செய்ததை குறிப்பிட்ட பதான், இங்கிலாந்து வீரர்கள் எந்தவித பணிச்சுமை குறித்த பேச்சும் இல்லாமல் முழு அக்கறையுடன் விளையாடுகிறார்கள் எனக் கூறினார். அதேபோல், ஜோஃப்ரா ஆர்ச்சரும் ஆட்டம் நிறைவு பெறும் வரை தொடர்ந்து பவுலிங் செய்ததையும் அவர் எடுத்துரைத்தார். ஆனால் இந்தியா பக்கம் பும்ரா சில ஓவர்கள் வீசிய பிறகு பவுலிங் செய்யத் தயக்கம் காட்டுவது ஏமாற்றமாக உள்ளது என அவர் விமர்சித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதே வீரர்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், பணிச்சுமை என்ற வார்த்தை போராட்ட ஆற்றலை மங்கச் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த சூழ்நிலையில், 8 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு தொடர் முக்கியமான 4வது போட்டி ஜூலை 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தியா தொடரை சமன் செய்யும் வாய்ப்பு பெறும் இந்தப் போட்டியில் பும்ரா அவசியம் விளையாட வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. அவருடைய பங்கேற்பே, தொடரின் இவ்விடத்தில் இந்திய அணியின் மீட்புக்கும் எதிர்கால நம்பிக்கைக்கும் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது.