ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை சிறப்புப் படை போலீஸார் கைது செய்தனர். இவர் ஆற்காடு சுரேஷின் உறவினர் என கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுக வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவைச் சேர்ந்த ஹரிஹரன், அதிமுக அவைத் தலைவர் மலர்க்கொடி, பாஜக தலைவர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 17 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். .
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என் கவுண்டரில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், பெரம்பூர் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் பிரதீப்பை போலீசார் இன்று கைது செய்தனர். இவர் கொலையுண்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் உறவினர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் பிரதீப்புடன் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.