சிறுநீரக ஆரோக்கியம் குறித்து நாம் சிந்திக்கும்போது, நீரேற்றம், இரத்த அழுத்தம் மற்றும் சோடியம் உட்கொள்ளல் போன்றவை அதிகமாக பேசப்படுகின்றன. ஆனால், மிகச்சிலரே கவனிக்கக்கூடிய முக்கிய ஊட்டச்சத்து ஒன்றான மெக்னீசியம், சிறுநீரக செயல்திறனில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. டாக்டர் பானு மிஸ்ரா கூறுவதைப் போல, நரம்பு இயக்கம் முதல் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு வரை 300க்கும் மேற்பட்ட நொதி எதிர்வினைகளில் மெக்னீசியம் ஈடுபடுகிறது. அதில் ஒன்று சிறுநீரகங்களை வலுப்படுத்துவதும் தான்.

சிறுநீரகங்கள் கழிவுகளை சுத்தப்படுத்துவது, இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவது மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பது போன்ற பணிகளை செய்கின்றன. இவை அனைத்திலும் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வாஸ்குலர் செயல்பாட்டை மேம்படுத்துவதால், வீக்கங்களை குறைப்பதிலும், இரத்த அழுத்தத்தை சீராக்குவதிலும் உதவுகிறது. அதனால், மெக்னீசியம் நமக்குத் தேவைப்படாத கழிவுகளை நீக்கும் செயல்திறனை அதிகரிக்கிறது.
மேலும், மெக்னீசியம் சிறுநீரகக் கற்களை, குறிப்பாக கால்சியம் ஆக்ஸலேட் கற்களை தடுக்க உதவுகிறது. குடலில் ஆக்ஸலேட்டுடன் பிணைந்து அதன் உறிஞ்சுதலைத் தடுப்பதன் மூலம், இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கும். மெக்னீசியம் குறைவானவர்கள் இந்தக் கற்களுக்கு மீண்டும் மீண்டும் ஆளாகக்கூடிய ஆபத்தும் அதிகம். குறைந்த மெக்னீசியம் அளவு, இன்சுலின் எதிர்ப்பு, வாஸ்குலர் கால்சிஃபிகேஷன் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கி, நாள்பட்ட சிறுநீரக நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மெக்னீசியம் நிறைந்த உணவுகளைச் சேர்த்தல் மூலமாக சிறுநீரகங்களை பாதுகாக்க முடியும். இலைகள், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் முழுதானியங்கள் ஆகியவை மெக்னீசியம் நிறைந்தவை. ஆனால், ஏற்கனவே சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்கக்கூடாது. இது உடலில் மெக்னீசியம் அதிகமாக சுரிந்து நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.