தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சனை, அண்மையில் பதற்றமூட்டும் நிலைக்கு சென்றுள்ளது. கடந்த மே மாதத்தில் கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, இரு நாடுகளும் பெரும் ராணுவச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் முக்கியமான பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து ராணுவம், கம்போடிய எல்லைப் பகுதியில் துப்பாக்கி, பீரங்கி மற்றும் ராக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டதாகத் தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட மோதலில் 16 பேர், அதில் குழந்தைகள் உட்பட, உயிரிழந்துள்ளனர். மேலும் 15 ராணுவ வீரர்களும், 30 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். 50,000க்கும் மேற்பட்ட தாய்லாந்து மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்; கம்போடியாவிலும் 4,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்காலிகத் தாய்லாந்து பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய், “கம்போடியாவுடன் மோதல் தீவிரமாகியுள்ளது; ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்பு முயற்சிகள் மக்கள் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்துகின்றன” என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, இரு நாடுகளின் எல்லைப் பகுதி மிகவும் அபாயகரமானதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், உபோன் ரட்சதானி, சூரின், சிசாகெட், புரிராம், சா கேயோ, சந்தபுரி மற்றும் டிராட் ஆகிய மாகாணங்களில் உள்ள 20 இடங்களுக்கு இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலைமைப் பார்க்கும்போது, இந்தியர்களுக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.