கோவை: தமிழகத்திற்கு மத்திய அரசு பல திட்டங்களை அளித்தாலும், அவற்றை முறையாக செயல்படுத்துவதில் மாநில அரசு தவறி வருவதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.
கோவை மேரியட் ஓட்டலில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
இதில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகால மோடி அரசின் கடின உழைப்பு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, புதிய இந்தியாவுக்கான நோக்கம், பாதுகாப்பு மற்றும் புதிய வளர்ச்சிக் கொள்கையின் காரணமாக மக்கள் மூன்றாவது முறையாக பாஜகவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தமிழகம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ரயில்வே துறை திட்டங்களுக்கு கடந்த ஆண்டை விட 300 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு பல திட்டங்களை வழங்கியும், மாநில அரசு அதை முறையாக செயல்படுத்த தவறி வருகிறது
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் எதிர்கால பட்ஜெட்டாகும். நுண் தொழில்கள் நிறைந்த கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கு பலனளிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.