சென்னை: குரூப் 2, குரூப் 2A பதவிகளில் காலியாக உள்ள 1936 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஜூன் 20 அன்று அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் பதவிக்கான முதற்கட்டத் தேர்வு செப்டம்பர் 14 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் 5 லட்சத்து 81,305 பேர் கலந்து கொண்டனர். இந்தத் தேர்வுக்கான முடிவு டிசம்பர் 12 அன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில், குரூப் 2A பதவிக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 8 அன்று நடைபெற்றது. இதில் 20,033 பேர் பங்கேற்றனர். முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தேர்வுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இருவழி தொடர்பு அமைப்பு மூலம் மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி மே 5 அன்று வெளியிட்டது.

இந்த நிலையில், அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும். சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். இந்த சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் வரும் 1-ம் தேதி வரை நடைபெறும்.
சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இது குறித்த விவரங்கள் SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் அவர்கள் கலந்து கொள்ளத் தவறினால், அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.