சென்னை: சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் “இன்று பூமி முழுவதும் 6 நிமிடங்களுக்கு இருளாகும்” என்ற செய்திகள் பரவியுள்ளன. இதற்கான காரணமாக சூரிய கிரகணத்தைச் சுட்டிக்காட்டியிருந்தனர். இது உண்மையா என்ற கேள்விக்கு பதிலளிக்க நாசா நேரடியாக விளக்கம் அளித்துள்ளது.

சூரிய கிரகணம் என்பது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் நுழையும் போது, சந்திரன் சூரியனை மறைப்பதால் பூமியில் சில நிமிடங்களுக்கு சூரிய ஒளி குறையும் இயற்கை நிகழ்வாகும். இதற்கும் பூமி முழுவதும் இருளாகும் என்ற வதந்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நாசா தெளிவுபடுத்தியுள்ளது.
இன்றைய தேதியில் (2025 ஆகஸ்ட் 2) எந்தவொரு சிறப்பு சூரிய கிரகணமும் நடைபெறுவதில்லை. இதுபோன்ற மிக நீளமான கிரகணம், 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்த “நூற்றாண்டின் சூரிய கிரகணம்” என அழைக்கப்படும் நிகழ்வு, 6 நிமிடங்கள் 22 வினாடிகள் நீடிக்கும். ஆனால் இதுவும் பூமி முழுவதும் இருளாக வைக்கும் அளவுக்கு இல்லை.
இந்த கிரகணம் ஸ்பெயின், மொராக்கோ, லிபியா, எகிப்து உள்ளிட்ட 11 நாடுகளில் மட்டுமே தெரியும். மொத்த பூமி முழுவதும் இருள் நிலவும் என்பது தவறான தகவல். அந்த நாடுகளிலும் முழுமையான இருள் ஏற்படாது. வெறும் மாலை நேரத்தைப் போல் ஒளி குறைவாக இருக்கும்.
இதனால், சமூக வலைதளங்களில் பரவும் இவ்வகை தவறான தகவல்களை நம்பி பொதுமக்கள் பீதி அடைய வேண்டியதில்லை. நாசா உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்ப வேண்டியது முக்கியம்.