சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டிஐஜி வருண்குமாருக்கு எதிராக ஆதாரமில்லாமல் அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக கூறி, அவரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 2) பிறப்பித்துள்ளது.

சமீபமாக, சீமான் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு, இருவரும் பரஸ்பரம் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சீமான் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொது மேடைகளிலும் ஊடகங்களிலும் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கூறி, வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், சீமான் மீதான அவதூறு பேச்சுகளுக்கு எதிராக தடை விதிக்க வேண்டும் என்றும், தனக்கு ரூ.2.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
சீமான் தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி, “இந்த வழக்கு இன்னும் எண்ணிடப்படவில்லை. பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட வேண்டும். தற்போது இடைக்கால உத்தரவு வழங்க கூடாது. ஏற்கனவே மதுரை அமர்வில் தொடர்புடைய வழக்கு நடைபெற்று வருகிறது” என வாதிட்டார். ஆனால் நீதிபதி இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்து, சீமான் டிஐஜி வருண்குமாருக்கு எதிராக கருத்து தெரிவிப்பதைத் தற்காலிகமாகத் தடை செய்தார்.
மேலும், வருண்குமார் தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்க சீமான் தரப்புக்கு வாய்ப்பு அளித்து, வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.