சென்னை: ‘மூன்றாண்டுகளில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 5,577 கோடி ரூபாய் மதிப்புள்ள, 6,140 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு அறிக்கை:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளை கண்டு மக்கள் வியந்து போயுள்ளனர். மூன்று ஆண்டுகளில், 1,355 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 8,436 கோயில்களில் ரூ.3,776 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிட பகுதிகளில் கிராமப்புறங்களில் உள்ள 1,250 கோவில்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்; கோவில்களில் உள்ள 143 குளங்களை சீரமைக்க 84 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2.71 கோடி மதிப்பில் மூன்று கோவில்களில் புதிய குளங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
சமயபுரம், திருவெண்ணெய்நல்லுார், திருப்பாற்கடல், தாராபுரம், அரியலுார், சென்னை கீழ்ப்பாக்கம் ஆகிய ஆறு கோவில்களில், 8 கோடி ரூபாய் செலவில், ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆறு கோவில்களுக்கு, 28.7 கோடி ரூபாய் செலவில், ராஜகோபுரங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. புதிதாக, 15 கோவில்களில், 25.9 கோடி ரூபாய் செலவில், ராஜகோபுரங்கள் கட்டப்பட உள்ளன.
எட்டு கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆண்டு மேலும் மூன்று கோவில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். 756 கோவில்களில் அன்னதான திட்டம் இயங்குகிறது; தினமும் 82,000 பேர் பயனடைகின்றனர். மூன்றாண்டுகளில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான, 5,577 கோடி ரூபாய் மதிப்பிலான, 6,140 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.257 கோடியில் 73 கோயில்களில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக ரூ.70.5 கோடியில் 17 தங்கும் விடுதிகள் கட்டும் பணி நடந்து வருகிறது. 83.6 கோடி செலவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்காக 48 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. கோவில்களில் உள்ள 123 பசு கோவில்கள் 20.6 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, ஆறு கோவில்களில் இருந்த நகைகளை உருக்கி, 344 கிலோ தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு, 191 கோடி ரூபாய், வங்கியில் முதலீடு செய்யப்பட்டது.
ஒருகால பூஜை திட்டத்தின் கீழ், 2,000 கோவில்களுக்கு, தலா, 2 லட்சம் ரூபாய் வீதம், 40 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பணிகளை மேற்கொண்டு வரும் இந்து சமய அறநிலையத்துறைக்கும், அரசுக்கும், முதல்வருக்கும் பக்தர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.