நத்திங் நிறுவனம் சமீபத்தில் தனது CMF போன் 1-ஐ வெளியிட்டது. இந்த போனிற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தனது 2a பிளஸ் மாடலை வெளியிட தயாராக உள்ளது. நத்திங் போன் 2a பிளஸ் வருகிற 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போன் தொடர்பான டீசரை நத்திங் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் நத்திங் போன் 2a பிளஸ் போன் இதற்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 2aவின் டிசைனை போன்றே காட்சியளிக்கிறது.
அதிகாரப்பூர்வ டீஸரின் படி, 2a பிளஸ் மெட்டல் பாடியை கொண்டிருக்கும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Nord 4 போன்ற விலை வரம்பில் இந்த போனும் வரலாம் என தெரியவந்துள்ளது. வெளியிட்டு தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போனின் சிறப்பம்சங்கள் குறித்த எந்த ஒரு விவரமும் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும் ஒரு சில தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது.
அந்த தகவலின்படி இந்த போன் பெரிய டிஸ்பிளே, பின்புறத்தில் கூடுதல் கேமரா மற்றும் பெரிய பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை பெற்றிருக்கும் என தெரியவந்துள்ளது. நத்திங் போன் 2a MediaTek Dimensity 7200 Pro SoC மூலம் இயக்கப்படுகிறது. 50MP இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32MP ஷூட்டரும் உள்ளது. இது துல்லிமான செல்பி புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க உதவியாக இருக்கும். இது 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 1300 நிட்கள் வரைபிரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் இதில் 45 W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. நத்திங் போன் 2a இந்தியாவில் ரூ.23,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அடிப்படை ஸ்டோரேஜ் வேரியண்ட் 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 23,999, அதே சமயம் 8GB + 256GB மற்றும் 12GB + 256GB வேரியண்ட்டுகளின் விலை முறையே ரூ. 25,999 மற்றும் ரூ. 27,999 ஆகும். இந்த நிலையில் நத்திங் போன் 2a பிளஸ் ரூ. 30,000 என்ற ஆரம்ப விலையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிறப்பம்சங்களை பொறுத்தவரை நத்திங் போன் 2aவின் அப்டேட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. நத்திங் போன் 2a பிளஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் நிறங்கள் உள்ளிட்ட விவரங்கள் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், இனி வரும் நாட்களில் ஒவ்வொன்றாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.