இது குறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய-மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்தியாவின் தெற்கு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழ்நாட்டின் சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில இடங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 77-78.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்.
தெற்கு தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரி கடல், தெற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா, அந்தமான் கடல் மற்றும் ஆந்திரா-ஒடிசா கடற்கரைகளில் இன்று மணிக்கு 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.