கிழக்கு சீனக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்றது. தைவான் புயலுக்கு ‘போடூல்’ என்று பெயரிட்டுள்ளது, இது தென்கிழக்கு கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போடூல் புயல் நேற்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் கரையைக் கடந்தது. இது கடலோர மாகாணங்களான தைதூங், ஹுவாலியன், பிங்டூங் மற்றும் யுன்லினை மணிக்கு 120 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் தாக்கியது.
இதன் விளைவாக, அங்குள்ள நகரங்கள் சூறாவளியால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. புயல் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழையைக் கொண்டு வந்தது. 8 செ.மீ. கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயலால் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தைவானில் இருந்து ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் 130 சர்வதேச விமானங்களும், 300 உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டன.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 10,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புயலில் 5 பேர் இறந்தனர். புயல் காரணமாக ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் பெய்த கனமழையில் 8 பேர் இறந்தனர்.