புது டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370-வது பிரிவை மத்திய அரசு 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, மாநிலம் ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில், கல்வியாளர் ஜாஹூர் அகமது பட் மற்றும் சமூக-அரசியல் ஆர்வலர் அகமது மாலிக் ஆகியோர் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கோரினார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது” என்றார்.
இதைத் தொடர்ந்து, மனு மீது விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.