பிகாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தேசிய அளவில் பெரும் விவாதமாக மாறியுள்ளன. வாக்காளர் பட்டியல் தொடர்பான குறைகளை தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 28,370 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த பணியை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் 65 லட்சம் போலி வாக்காளர்களை நீக்கியதாக அறிவித்துள்ளது. எனினும், வரைவு பட்டியலிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் முறைகேடுகளில் ஈடுபட்டு, போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறிப்பாக பெங்களூருவில் ஒற்றை படுக்கை அறை கொண்ட முகவரியில் 80 வாக்காளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் விளக்கம் அளித்தார். அவர், “எங்களிடம் ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ என பாகுபாடு இல்லை. 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியரும் வாக்காளராக பதிவு செய்யப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் எந்தக் கட்சிக்கும் சலுகை காட்டாது. வாக்காளர் பட்டியல் தொடர்பான புகார்கள் அனைத்தும் கவனத்தில் எடுக்கப்படும்” என்று கூறினார்.
மேலும் அவர், தேர்தல் செயல்முறைகள் அனைத்தும் வெளிப்படையான முறையில் நடைபெறுகின்றன என்றும், அனைத்து கட்சிகளுக்கும் குறைகளை தெரிவிக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினார். “தேர்தல் ஆணையம் தனது அரசியலமைப்பு கடமையிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது. வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
பிகாரில் நடந்துவரும் இந்த சர்ச்சை உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. பல்வேறு வழக்குகள் அங்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இதனால், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பாக தேசிய அளவில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.