அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகு, அஜித்தின் 64-வது படத்தையும் ஆதிக் இயக்குவார். அவர் சமீபத்தில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருந்தார்.
மிஷ்கின் வில்லனாகவும், ஸ்ரீலீலா கதாநாயகியாகவும் நடிப்பார் என்று செய்திகள் வந்தன. இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதிக், அஜித்தின் 64-வது படம் பற்றிப் பேசினார். “குட் பேட் அக்லி அஜித்தின் ரசிகர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது.

அஜித்தின் 64-வது படம் அனைவருக்கும் ஏற்ற படமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். அஜித்தை ஒரு புதிய கோணத்தில் காட்ட திட்டமிட்டுள்ளேன்.
அது அவரது ரசிகர்கள் விரும்பும் விதத்தில் இருக்கும்” என்று அவர் கூறினார். இந்தப் படம் 2026 கோடையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.