ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக முன்னாள் அமைச்சரும், துணைப் பொதுச்செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் ஆகிய இருவரும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும், துணைப் பொதுச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதனும் கூட்டத்தில் பங்கேற்று இருந்தபோது, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
கூட்டத்தை பாதியில் முடித்துவிட்டு வீட்டில் ஓய்வெடுக்கச் சென்ற அவர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று இரவு 9 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நரம்பியல் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னல், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.