திருவனந்தபுரம்: உலக கால்பந்தின் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் கேரளாவில் நட்பு போட்டி ஆட உள்ளது. இதை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

2022 கத்தார் உலகக் கோப்பையில் பிரான்சை வீழ்த்தி, 1978 மற்றும் 1986க்குப் பிறகு மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது அர்ஜென்டினா. அதன் பின்னர் கேப்டன் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அணி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்திய ரசிகர்களுக்காக அர்ஜென்டினா அணி கேரளாவில் நட்பு போட்டி ஆட இருப்பது மிகப்பெரும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மெஸ்ஸியின் நேரடி ஆட்டத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்க இருப்பதால், கால்பந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அர்ஜென்டினா கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி நவம்பர் மாதம் கேரளாவில் விளையாடும்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால், கேரளா மற்றும் தென் இந்தியா முழுவதும் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நட்பு போட்டி நடைபெறும் இடம் மற்றும் எதிரணி அணி பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. மெஸ்ஸியின் இந்திய பயணம், உள்ளூர் விளையாட்டை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது.