புதுடெல்லி: அணுமின் உற்பத்தியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அதிவேக உலைகளில் புளூட்டோனியத்தை பயன்படுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
நம் நாட்டில், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில், அதிகவேக ஈனுலை, 39 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் யுரேனியம் அணுமின் உற்பத்திக்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு குறைவாக உள்ளது.
மேலும், யுரேனியம் மிகக் குறைந்த அளவிலேயே கிடைக்கிறது.
இந்நிலையில், இதற்கு மாற்றாக தோரியம் எனப்படும் அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. தோரியம் நம் நாட்டில் ஏராளமாக கிடைக்கிறது. அதற்கு முன், யுரேனியத்திற்கு மாற்றாக புளூட்டோனியத்தைப் பயன்படுத்த இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நல்ல பலனைத் தந்தால், அதற்கடுத்து தோரியம் பயன்படுத்தப்படும்.
இதன் மூலம் அடுத்த 300 ஆண்டுகளுக்கு அணு மின் உற்பத்திக்கு இந்தியா எந்த நாட்டையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என அணுசக்தி கட்டுப்பாட்டு வாரிய தலைவர் தினேஷ் குமார் சுக்லா தெரிவித்துள்ளார்.