சென்னை வந்த “இந்தியா” கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். அவரை வரவேற்ற ஸ்டாலின், “துணை ஜனாதிபதிக்கு தகுதியானவர் சுதர்சன் ரெட்டி தான். தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கும், மக்களின் விருப்பங்களுக்கும் மதிப்பு அளிப்பவர்” எனக் குறிப்பிட்டார்.

வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். அதேசமயம், “இந்தியா” கூட்டணி சார்பில் ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
சென்னை தியாகராய நகர் நடைபெற்ற ஆலோசனையில் சுதர்சன் ரெட்டி நேரடியாக ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார். அப்போது ஸ்டாலின், “நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் ஆபத்தில் சிக்கியுள்ளது. மக்கள் ஆட்சியை காப்பாற்ற சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தர வேண்டும்” எனக் கூறினார்.
மேலும் அவர், “தமிழக மக்களுக்கு எதிராக பல தீமைகளை செய்த பாஜக, தற்போது முகமூடி அணிந்து ஆதரவை கேட்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. தென்னகத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி துணை ஜனாதிபதியாக வருவது, நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்றும். அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நீதிக்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் அர்ப்பணித்துள்ளார்” என வலியுறுத்தினார்.
ஸ்டாலின் மேலும், “புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடந்த கருத்தரங்கிலும் பங்கேற்று தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியவர். மக்கள் ஆட்சிக்கு உண்மையான காவலராக சுதர்சன் ரெட்டி விளங்குவார்” எனக் குறிப்பிட்டார்.